சித்தர்களின் மூலம், பாரம்பரியம், இன்றைய நிலை

வரலாற்று நோக்கில் சித்தர்கள் ஆராய்ச்சி

Archive for the ‘பற்று’ Category

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (1)

Posted by vedaprakash மேல் திசெம்பர் 16, 2022

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி, சித்த மருத்துவ மாநாடு முதலியன (1)

சென்னையில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான இது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு மருத்துவ மனை மற்றும்ஆராய்ச்சி நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது. திராவிடத்துவ சித்தாந்திகள், எதை-எதையோ பேசுவார்கள், ஆனால், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது: இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்த மருத்துவமனை 14.78 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நிசப்தம் நிலவும் மருத்துவமனை வளாகத்தில், 300 வகையான மூலிகைச் செடிகளையும் மரங்களையும் பார்க்கலாம். வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் துறை, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்துக்கென தனி தனி கட்டடங்களுடன் செயல்படுகிறது இந்த மருத்துவமனை. இங்கே சராசரியாக ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வருடத்தில் 365 நாள்களும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை வெளி நோயாளிகளுக்கும், 24 மணி நேரமும் உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது: வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு அந்தந்த நோய்களுக்கு ஏற்ப வர்மம், தொக்கணம், அட்டைவிடுதல், பற்று, ஒத்தடம், புகை, சுட்டிகை மற்றும் யோகம் ஆகிய சித்த மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சர்க்கரைநோய், இதயநோய், ஆஸ்துமா, மூலம், காயங்கள், சிராய்ப்பு, தீக்காயங்கள் போன்றவற்றுக்குச் சிறப்பாகச் சிகிச்சை அளிக்கிறார்கள். முதியோர் நலம், மகளிர் மருத்துவம், யோகம் – காயகல்பம், உடல் பருமன், ஒப்பனையியல், மகப்பேறின்மை, ஆட்டிசம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள்.

குழந்தைகள் நோய் பிரிவு: குழந்தைகளை பாதிக்கும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பகுதியில், சரும நோய்கள், கரப்பான், சொறி சிரங்கு, பூச்சிக்கடியால் ஏற்படும் அலர்ஜி ஆகியவற்றுக்கு இங்கே சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை, மலச்சிக்கலுக்குச் சுக்கு, மிளகு போன்ற அஞ்சறைப் பெட்டி மருந்துகளை முறைப்படுத்தி, நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஓமத்தண்ணீர், மாதுளம்பழ சிரப் (syrup), தயிர்சுண்டி சூரணம் ஆகியவை குழந்தைகளின் உடல்நிலையை ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்பது போன்ற எளிய முறைகளைச் சொல்லித் தருகின்றனர்.  மேலும், சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இயற்கையாக ஏற்படும் மூளை வாதம், குழந்தையின் ஒரு பக்க உறுப்புகளின் செயல்பாடு குறைவாக இருப்பதால் உண்டாகும் பால வாதத்துக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆட்டிசம், ஹைப்பர்ஆக்டிவ் டிஸ்ஆர்டர், ஏ.டி.ஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder), கற்றல் கோளாறுகள் ஆகிய பிரச்னைகளுக்கும் இங்கே சிகிச்சை கொடுக்கிறார்கள். உடம்பில் முக்கியமான புள்ளிகளை அழுத்தி, மூளை அல்லது செயலிழந்த நரம்புகளை மீண்டும் செயல்படவைக்கும் வர்ம சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. அதோடு பிசியோதெரபியும் தரப்படுகிறது. சிதம்பரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து கடந்த இரண்டரை மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று விசாரித்தோம்… “முன்னாடில்லாம் பேச மாட்டான்; நடக்க மாட்டான். கை, கால் நேரா நிக்காது. இப்போ நல்லா நிக்குறான். சில வார்த்தைகளைப் பேசுறான். எவ்வளவு கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸே பண்ணாம இருந்தவன், இப்போ ரியாக்‌ஷன் கொடுக்குறான்’’ என்றார்.

பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுகள், சிகிச்சை முதலியன: பெண்கள் தொடர்பான எல்லா நோய்களுக்கும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, சூதகத்தடை (Absence of Menstruation), மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (Menorrhagia) ஆகியவற்றுக்கும், `கர்ப்பப்பைக் கட்டி’ (Fibroid) எனப்படும் நார்த்திசுக் கட்டிப் பிரச்னைக்கும் சிகிச்சை… மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் மனக்குழப்பங்களுக்கு நோயாளிக்குத் தேவையான கவுன்சலிங் (counselling) கொடுக்கிறார்கள். மகப்பேறின்மைக்காக ஆண்,பெண் இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இதற்கெனச் சிறப்பு ஓ.பி (புறநோயாளிகள் பிரிவு) இயங்குகிறது. மார்பகங்களில் உண்டாகும் நீர்க்கட்டி, உடல் பருமன் ஆகியவற்றையும் கவனிக்கிறார்கள். பிரசவம் தவிர, கர்ப்பிணிகளுக்குத் தேவையான அனைத்துச் சிகிச்சைகளும், உதவிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

பலவிதமானா நோய்கள், குறைபாடுகள் முதலியவற்றிற்கு சிகிச்சை: கழுத்துவலி, இடுப்புவலி, பக்கவாதம், தூக்கமின்மை, மனநிலை மாறுபாடுகள், தலைவலி ஆகியவற்றுக்கு வர்ம சிகிச்சை கொடுக்கிறார்கள். அங்கே வந்திருந்த 72 வயது ஜெயலட்சுமியிடம் பேசினோம்…”எனக்குப் பக்கவாதத்தால கை, கால் செயல்படாமப் போச்சு. ஆறு மாசமா சிகிச்சை எடுக்குறேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தைலம், லேகியம், மாத்திரைனு நிறைய மருந்துகள் தர்றாங்க,’’ என்றார். எலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எண்ணெய் தடவுதல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், வயதானவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் முறிவு, அடிபடுவதால் ஏற்படும் முறிவு உள்ளிட்ட பல குறைபாடுகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.

அட்டை வைத்து சிகிச்சைலீச் தெராபி: ‘அட்டைவிடுதல்’ (leech therapy) பகுதி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. `அட்டைவிடுதல்’ என்பது, உடலிலுள்ள அசுத்தமான ரத்தத்தை நீக்குவதற்கு அல்லது சுத்தப்படுத்துவதற்கு பாதிப்புக்குள்ளான இடத்தில் அட்டையைவிடும் முறை. அட்டையைக் குறிப்பிட்ட அந்த இடத்தில் கடிக்கவிட்டால், தேவையில்லாத ரத்தம் உறிஞ்சப்படும். காயம்பட்ட இடத்திலிருந்து அதிகபட்சமாக 120 மி.லி வரை ரத்தத்தை உறிஞ்சிவிடுமாம் அட்டை. ஒரு நோயாளிக்கு நான்கு அட்டைகளை கடிக்கவிடுகிறார்கள். `இந்த அட்டை கடிப்பதால் வலி இருக்காது; இதன் மூலம் கரப்பான், புழுவெட்டு, மூட்டு வீங்குதல், அடிபட்ட வீக்கம் போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்கிறார்கள். 

நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன: பெளத்திரம் பிரச்னைக்கு, `கார நூல்’ எனப்படும் மருந்து நூலைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் எளிய ஆசனப் பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன. நோய்களுக்கு ஏற்ப யோகா கற்றுத் தரப்படுகிறது. ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு யோக மருத்துவச் சிகிச்சையும் தருகிறார்கள். சித்த மருத்துவ அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் இ.சி.ஜி, எக்ஸ்ரே, யு.எஸ்.ஜி (உயரிய ரத்த சோதனை), பயோ கெமிக்கல் டெஸ்ட் (Bio-chemical Test), நுண்ணுயிரியியல் சோதனை (Microbiological Test), நோய்க் குறியியல் சோதனை (Pathological Test), சித்தா நோய் கண்டறியும் சோதனை (Siddha diagnostic Test) மற்றும் மருந்தகம் (Pharmacology) ஆகிய நவீன வசதிகளும் இங்கே இருக்கின்றன[1]. மொத்தத்தில் எளியோர் முதற்கொண்டு எல்லோரும் பயனடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுகிறது இந்தச் சித்த மருத்துவமனை[2].

டிசம்பர் 2022ல் கோவாவில் 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ்: இன்று கோவாவின் பனாஜியில் மத்திய சுற்றுலா மற்றும் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக், முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ், உலக அளவில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) துறையின் சந்தை அளவு 2014 இல் 3 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதிலிருந்து இப்போது 18 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளது. 2014-2020 ஆம் ஆண்டில், ஆயுஷ் தொழில்துறை ஆண்டுக்கு ஆண்டு 17 சதவீதம் வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் ஆயுர்வேத சந்தை 2021-2026 லிருந்து ஒட்டுமொத்த வருடாந்தர வளர்ச்சி 15 சதவிகிதம்  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சித்த மருத்துவ நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முயற்சியால் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் – AYUSH) துறைகளில் புதிய பல கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதற்காக தேசிய சித்த மருத்துவம் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அண்மையில் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சித்த மருத்துவம் குறித்து ஆயுஷ் சாரா மருத்துவர்களுக்கான ஒருங் கிணைந்த பயிற்சி முகாம் கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. ஒருவாரம் நடைபெறும் பயிற்சி முகாம், அது குறித்த கையேடும் வெளியிடப் பட்டது.

© வேதபிரகாஷ்

16-12-2022.


[1] விகடன், பாரம்பர்ய சிகிச்சை, நவீன வசதிகள்தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் ஒரு நாள்!, நான்சி மேரி, ஆர்.மகாலட்சுமி, Published:03 Jul 2018 5 PMUpdated:03 Jul 2018 5 PM

[2] https://www.vikatan.com/health/healthy/129633-traditional-treatment-modern-facilities-tambaram-national-siddha-hospital

Posted in அகத்தியர், அறுவை சிகிச்சை, அறுவைசிகிச்சை, ஆபரேஷன், ஆயுர்வேதம், ஆயுள், ஆயுள்வேதம், இந்திரியம், உடல், உயிர், எலும்பியல், ஒத்தடம், கண், கரைசல், கல்பம், காது, கை, சர்க்கரைநோய், சிகிச்சை, சித்தர், சிராய்ப்பு, தமிழ்நாடு, திராவிடம், திருமூலர், தீக்காயங்கள், நாத்திகம், பதஞ்சலி, பரம்பரை, பற்று, மருந்து, வர்மம் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »